பதிலளிக்கப்பட்ட செபம்

பதிலளிக்கப்பட்ட செபம் (1 குறிப்பேடு 4:10)

கடவுளையும் மனிதனையும் தொடர்புப்படுத்தும் சாதனங்களில் செபம் பிரதான இடத்தை வகிக்கின்றது. பொதுவாக தனிநபர் மன்றாடல், சமூக மன்றாடல் என மன்றாடலை வகைப்படுத்தலாம். செபம் இல்லாத வாழ்வு கூரையில்லாத வீடு போன்றது என அநேகர் கூறுவர். பொதுவாக நாம் எல்லோருமே செப வாழ்வில் ஈடுபடுகின்றோம். பல சந்தர்ப்பங்களில் நாம் செய்யும் செபங்களுக்கு பதில் கிடைக்கின்ற போதிலும் வேறு சில சந்தர்ப்பங்களில் விடை கிடைக்காமல் இருப்பதை எமது நாளாந்த வாழ்வில் அனுபவிக்கின்றோம். இங்கு செபித்து பதிலைப் பெற்றுக் கொண்ட ஓர் அடியவனின் செபத்தைக் குறித்து சிந்திக்க உள்ளோம். நாமும் எமது செப வாழ்வை மேற்கூறிய வகையில் அமைத்துக்கொள்ளும் போது இறைவனிடம் இருந்து பதிலைப் பெறுவது நிச்சயம்.

பதிலளிக்கப்பட்ட செபம்


யாபேஸ் என்ற மனிதன் இஸ்ரயேல் தேசத்தில் மிகவும் நெருக்கடியான சூழலில் வாழ்ந்து வருகின்றார். இஸ்ரயேல் மக்கள் பலவிதமான அரசியல், பொருளாதார, சமூக, கலை, கலாசாரப் பின்னணிகளில் வாழ்ந்து வந்தனர். இத்தகைய சூழலில் யாப்பேசை அவள் தாயார் பெற்றெடுத்தப்படியால் யாபேஸ் எனப்பெயரிட்டார். ஏனெனில் யாபேஸ் என்பதற்கு துக்கமுள்ளவன் என அர்த்தமாகும். இத்தகைய தனி மனித, சமூக அனுபவங்களின் மத்தியிலேயே யாபேஸ் இறைவனை நோக்கி பின்வருமாறு மன்றாடுவதை 1 குறிப்பேடு 4:10 இல் நாம் வாசித்து அறியலாமம். "கடவுளே, மெய்யாகவே நீர் எனக்கு ஆசி வழங்கி என் எல்லையைப் பெரிதாக்குவீராக! உம் கை என்னோடு இருப்பதாக! தீங்கு என்னைத்துன்புறுத்தாது நீர் பாதுகாத்தருள்வீராக! என்று மன்றாடினார். கடவுளும் அவர் வேண்டியதை அருளினார்.

யாப்பேஸின் மன்றாடலை பொதுவாக மூன்றாக வகைப்படுத்தலாம். முதலாவதாக யாபேஸ் தன் கடவுளை நோக்கி கர்த்தாவே நீர் என்னை ஆசிர்வதியும் என மன்றாடினார். இரண்டாவதாக எனது எல்லையை பெரிதாக்கும் என வேண்டினார். மூன்றாவதாக உமது கரம் என்னோடு கூட இருந்து தீங்கிற்கு என்னை விலக்கிக்காத்தருளும் என வேண்டினார். குறிப்பாக யாபேஸ் கடவுளை நோக்கி  கர்த்தாவே நீர் என்னை ஆசிர்வதித்தருளும் என செபிக்கின்றார். இஸ்ரயேலரை ஆசிர்வதிப்பதே இறைவனுக்குப் பிரியம் என்பதை எண்ணிக்கை 24:1 ல் நாம் காணலாம். இதன் அடித்தளத்தில் யாபேஸ் கடவுளை நோக்கி எந்தவிதமான நிபந்தனைகளும் இன்றி மன்றாடுகிறார். கடவுளே நான் விரும்புகின்ற பிரகாரமோ இல்லையேல் எனது குடும்பத்தார் அல்லது எனது தேசம் விரும்புகின்ற பிரகாரமோ நீர் என்னை ஆசீர்வதியாமல் மாறாக நீர் விரும்புகின்றபடி என்னை ஆசீர்வதித்தருளும் என வேண்டுகிறார். இம்மன்றாடல் இறை திட்டத்திற்கு தன்னை பூரணமாக அர்ப்பணிக்கிறார். தனது திட்டத்தில் இறைவனை இணைத்துக்கொள்ளாமல் இறைவனின் திட்டத்தில் தன்னை இணைத்துக்கொள்கிறார். இப்பேர்ப்பட்ட செபத்திற்கு ஆண்டவரால் பதிலளிக்காமல் இருக்கமுடியவில்லை. இரண்டாவதாக எனது எல்லைகளைப் பெரிதாக்கும் என மன்றாடுகிறார். அக்காலத்தில் எதிரிகளால் இஸ்ரவேல் தேசத்தின் எல்லைகள் சூழப்பட்டு இருந்தன. இத்தகைய பின்னணியிலே இம்மன்றாடலை யாபேஸ் மன்றாடுகிறார். அதாவது ஆண்டவரே நான் பணியாற்றுவதற்கு எவ்வித தடைகளும் இன்றி செல்வதற்கு வேண்டிய வழிகளை ஆயத்தப்படுத்தித் தாரும் என மன்றாடுகிறார். இன, மத, மொழி, சாதி, சமய, கலாசார, பால் வேறுபாடுகளால் இன்று எமது எல்லைகள் குறுகிப்போன சூழலில் நாம் வாழ்ந்துக்கொண்டு இருக்கின்றோம். எனவே நாமும் கடவுளை நோக்கி எமது எல்லைகளை நாம் பெரிதாக்கிக் கொள்ள எமக்கு அருள்புரியும் என மன்றாடுவோமாக!

மூன்றாவதாக உமது கரம் என்னோடு கூட இருந்து தீங்கிற்கு என்னை விலக்கிக் காத்தருளும் என செபிக்கின்றார். யாபேஸ் மனித கரங்களின் நிச்சயமற்ற ஆதரவற்ற நிலைகளை நன்கு உணர்ந்திருப்பார். எனவே தான் மனித கரங்களைத் தவிர்த்து இறைவா உம்முடைய கரங்கள் என்னோடு இருக்கட்டும் என மன்றாடுகிறார். மேலும் கடவுளே தீமை இவ்வுலகத்தில் எப்போதும் நிலைக்கொண்டு இருக்கும் என யாப்பேஸ் நன்கு அறிவார். ஆண்டவர் இயேசுவும் தமது உன்னத குருத்துவ செபத்தின் போது தந்தையே தீமையே இவ்வுலகத்தில் இருந்து அழித்து விடும் என மன்றாடவில்லை. மாறாக தீமையில் இருந்து எமது சீடரை பாதுகாத்தருளும் என மன்றாடுகிறார். இதன் அடித்தளத்திலேயே யாப்பேசும் கடவுளை நோக்கி தீமையில் இருந்து என்னை பாதுகாத்தருளும் என மன்றாடுகிறார்.

யாப்பேசினுடைய மன்றாடலைக் கேட்ட ஆண்டவர் உடனடியாக பதிலளித்தார் என திருமறை கூறுகின்றது. நாமும் எமது செப வாழ்வில் கடவுளை நோக்கி இறைவா! நீர் விரும்புகின்ற பிரகாரம் எம்மை ஆசீர்வதித்து எம்மைத் தடுத்து நிறுத்தும், தடைகளைத் தாண்டிச் செல்லும் வகையில் எமது எல்லைகளைப் பெரிதாக்கித் தீமையில் இருந்து எம்மை விலக்கிக் காத்தரும் என மன்றாடுவோம். கடவுள் நிச்சயமாக எமது மன்றாடலைக் கேட்டுப் பதிலளிப்பார்.

By Rev. Arulampalm Stephen

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக