விழித்திருக்க அழைத்தல்

விழித்திருக்க அழைத்தல் (மாற்கு 13: 1-37)

மாற்கு நற்செய்தியில் 13ம் அதிகாரத்தை மறைப்பொருள் வெளிப்பாட்டு புத்தகம் என கூறுவர். அதாவது உண்மைகளை நேரடியாக கூறமுடியாதபோது மறைமுகமாக அதனை தெரிவிக்க முற்படுவதையே மறைப்பொருள் வெளிப்பாட்டு இலக்கியம் என்பர். இதன் ஒளியில் வர இருக்கின்ற துன்பங்களைக் குறித்த எச்சரிப்புக்கள், துன்பங்களின் விளைவுகள், பரிந்துரைகள், உறுதிப்படுத்தும் உவமைகள் ஆகிய முறைகளில் இப்பகுதி அமைந்துள்ளது. இங்கு உலகில் உள்ள அனைத்துக் கட்டங்களும் அலங்காரங்களும் ஆண்டவரின் நாளில் அழிந்துப்போகக் கூடியவைகள். மாறாக கடவுள் மீதான அன்பும் பக்தியுமே என்றும் நிலைத்திருக்கும் தன்மையுள்ளது என ஆசிரியர் கூறுகிறார். (சங்கீதம்/திருப்பாடல் 49:11, லூக்கா 12:21)

விழித்திருக்க அழைத்தல்
உலகில் இயற்கையின் அழிவுகள், யுத்தங்கள், பஞ்சங்கள் போன்ற இயற்கைக்கு எதிரான செயற்பாடுகள் பூமியில் ஏற்படும் போது இவைகள் அனைத்தையும் குறித்துப் பயப்படவேண்டிய தேவை இல்லை. ஏனெனில் அனைத்தையும் கட்டுப்படுத்துபவர் கடவுளே. எத்தகைய செயற்பாடுகளும் அவருடைய கட்டுப்பாடின்றி நடைபெறமாட்டாது. (மத்தேயு 1:20, 10:26, 28:5) மேலும் திருச்சபைக்கு உள்ளிருந்தும் திருச்சபைக்கு வெளியிலிருந்தும் இறையியல் கோட்பாடுகளை உபயோகித்தும் மேசியாத்தன்மையை உபயோகித்தும் மக்கள் விசுவாசத்தைக் குழப்புவர். இத்தகைய சூழ்நிலைகள் கி.பி 2ம் நூற்றாண்டில் வாழ்ந்த மொண்டேனியுஸ் போன்றவர்கள் தூய ஆவியின் பிரதிநிதிகள் தாங்களே எனக்கூறி நின்றனர். இந்நிலை திருச்சபைக்கு உள்ளிருந்து எழுந்த தப்பறையான கொள்கை ஆகும். (மாற்கு 13.6)

திருச்சபைக்கு வெளியிலிருந்து ஏற்படும் அரசியல், மத, துன்பங்களின் விளைவுகளைப் பற்றியும் நாம் இங்கே பார்க்கின்றோம். குறிப்பாக கி.பி 167ம் ஆண்டில் கிரேக்க மன்னனான 4ம் அந்தியோஸ் எப்பிபானஸ் பன்றி இறைச்சி உண்ண மறுத்த யூதர்களை கொலை செய்து பலிப்பீடத்தில் அதன் இரத்தத்தை ஊற்றிய நிகழ்ச்சி யூதர்களை வன்மையாக பாதித்தது. இப்பேர்ப்பட்ட நிகழ்வுகள் இடம் பெறுமென ஆண்டவர் இயேசு கூறினார். மேலும் உண்மைக்கு எதிராக மக்கள் செயற்பட்டு ஒருவரை ஒருவர் கொலை செய்வார்கள் எனப்போதித்தார். (மாற்கு 13:12)


இப்பேர்ப்பட்ட நிகழ்வுகள் நடைபெறும் போது நாங்கள் வெறுமனே செயற்படாமல் இருத்தல் ஆகாது. பவுல் தெசலோனிக்கேயத் திருச்சபைக்கு எழுதிய கடிதத்தில் ஆண்டவரின் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நீங்கள் வேலையை நிறுத்தி விட்டு சோம்பேறிகளாக இருக்காதீர்கள், மாறாக செயற்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்ந்து காலத்தின் குறிகளைக் கற்றறிய விரையுங்கள் என அழைக்கின்றார். (1 தெசலோ 4:11,2 தெசலோ 2:1-3) மேலும் இந்நிகழ்வுகள் எங்களை நாங்களே சோதித்து அறிவதற்கான ஓர் ஆவிக்குறிய பயிற்சி ஆகும். (மத்தேயு 6:31) அதாவது இக்னேசியஸ் லொயலாஸ் கூறுவதைப் போன்று நிகழ்கால நிகழ்வுகள் எதிர்கால ஆயத்தத்திற்கான ஏற்பாடுகளாக அமைதத்துக் கொள்ளல் வேண்டும் என்கின்றார். மேலும் இந்நிகழ்வுகள் ஆண்டவர் இயேசுவின் வல்லமையை எடுத்துக் காட்டுகின்றது. ஆண்டவர் இயேசு தீமையை மேற்கொள்ளும் அளவிற்கு அவரிடத்தில் வல்லமை காணப்பட்டது. (வெளி/திருக்காட்சி 22:20) எனவே இறுதி நாள் நிகழ்வுகள் எங்களை நாங்கள் நிதானித்துக் கொள்வதற்கும் விழித்திருக்க வேண்டிய சூழ்நிலையில் அன்பின் கடவுள் தமது மக்களை சந்திக்க வருவதற்கான வன்முறை சார்ந்த முறையை கையாளக்கூடுமோ என்ற வினாவைக் கேட்க அழைக்கப்படுகின்றோம்.

By Rev. Arulampalm Stephen

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக