திருமறையில் ஆண்டவர் இயேசுவைப் பின்பற்ற விரும்பி துக்கத்தோடு சென்ற ஓர் இளைஞனை இங்கு காண்கின்றோம். தனது வாழ்வில் அனைத்து நிறைவுகளோடு இவர் வாழ்ந்த போதும் தனது ஆன்மீக வாழ்வில் குறை உள்ளது என நினைத்துக் கொண்டது பாராட்டுதலுக்கு உரியதாகும். இவர் இயேசுவிடம் வந்து நிலையான வாழ்வைப் பெற்றுக் கொள் விரும்பிய போது இயேசு அவரை நோக்கி சீடத்துவத்தின் பெறுமதியை எண்ணிக்கொள்ளுமாறு வேண்டுகிறார். மேலும் இயேசுவை நல்லவர் எனக் கூறிய போது இயேசு அவரை நோக்கி தம்மைப் பின்பற்றுவோர் ஒருபோதும் தங்களை மையப்படுத்தாமல், முக்கியத்துவப்படுத்தாமல் கடவுளைப் பிரதிபலிக்கும் வாழ்வை வாழவேண்டும் எனக் கூறுகின்றார் (யோவான் 5 :19, 8 : 46, 10 : 30). இவருடைய வாழ்வு நியாயப்பிரமானத்தின்படி கட்டி எழுப்பப்பட்டிருந்தபோதிலும் இந்நீதிச்சட்டத்தால் இவருடைய ஆன்மீகத்திற்கு மாத்திரமே பிரயோஜனமானதாக இவரது வாழ்வு காணப்பட்டது. இத்தகைய ஆன்மீக வாழ்வு பிறருக்கு பயனுள்ளதாக இல்லாதபடியால் ஆண்டவர் இயேசு அவரை நோக்கி சொத்துக்களை விற்று ஏழைகளுக்குக் கொடுக்குமாறு பணிக்கின்றார்.
இயேசு இவரிடத்தில் அன்புடனேயே செயல்பட்டார். இயேசு இவரிடத்தில் காட்டிய அன்பு சிந்திப்பதற்கு உரியதாகும். ஏனெனில் இம்மனிதன் மனம் திரும்புவார் என்ற நம்பிக்கை இயேசுவிடம் காணப்பட்டது. மேலும் ஓர் சிறுபிள்ளையைப் போல அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கம் இவரிடத்தில் காணப்பட்டதையும் நாம் காணலாம். எனினும் ஆண்டவர் இயேசு அவரை நோக்கி உனக்கு உண்டான சொத்துக்களை விற்று ஏழைகளுக்கு கொட எனக் கூறினார். ஏனெனில் இவருடைய சொத்து கடவுளுக்கும் மனிதருக்கும் பணிவிடை செய்வதற்குத் தடையாகக் காணப்பட்டது. மேலும் இதை அறிந்த இயேசு அதை அகற்றுமாறு அவரிடத்தில் வேண்டினார். ஆனால் கடவுளுடைய சித்தத்திற்கும் வாலிபனுடைய சித்தத்திற்கும் இடையே போராட்டம் ஏற்பட்டது. இப்போராட்டத்தில் கடவுளுடைய சித்தம் தோல்வி அடைந்தது. வாலிபனோ தன்னுடைய சித்தத்தை நிறைவேற்ற விரும்பினான். இதனால் ஆண்டர் இயேசு இம்மனிதனை மனந்திரும்புதலின் பாதையில் இட்டுச் செல்லமுடியவில்லை. சில சந்தர்ப்பங்களில் மனமாற்றத்தின் பாதையில் பிறரை வழிநடத்திச் செல்லும்போது நாம் தோல்வியடையலாம் என்பதற்கு இது ஓர் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
இறையரசுப் பயணத்தில் நாம் பயணிக்கும் போது இப்பூவுலகில் அனுபவிக்கும் பதவிகள் எத்தகையவைகள், அனுபவிக்கும் ஆஸ்திகள் எத்தகையவைகள் என்பதை கணக்கிடுவதிலும் பார்க்க அவைகள் எப்படிப் பெறப்பட்டன அவைகளால் பயன்பெறுவர் யாவர் என்பதைக் குறித்து நாம் சிந்திக்க அழைக்கப்படுகின்றோம். மேலும் இறையரசில் செல்வந்தர்களுக்கு இடமில்லை என இயேசு கூறுகின்றார். ஏனெனில் செல்வந்தர்கள் மற்றவர்களால் எப்பொழுதும் முக்கியத்துவப்படுத்தப்படுபவர்கள் அவர்களுக்கு தாழ்மையுடன் கடவுளின் அரசில் பணியாற்றிவிட முடியாது. ஏனெனில் அவர்களுடைய சொத்துக்கள் கடவுளுக்கும் மனிதருக்கும் தடையாகக் காணப்படுகின்றது. மேலும் நற்செய்தியின் பொருட்டும் இறையரசின் பொருட்டும் எங்களை இழக்க நேரிடும்போது இதற்கான பலாபலன்களை நாம் பெற்றுக்கொள்ளுகின்றோம். மேலும் எமது பணியில் எதிர்கால ஆசிர்வாதங்களை எண்ணிக்கொள்ளாமல் நிகழ்கால சீடத்துவத்திற்கான பெறுமதியைக் கணக்கிடுவதே இறையரசிற்கான நுழைவுச்சீட்டாகும். இத்தகைய சீடத்துவப் பண்புகளை இவ்வாலிபன் தன்னகத்தே தாங்கிக் கொள்ள மறுத்தபடியால் இவன் இறையரசிற்கு தூரமானவன் ஆகின்றான்.
By Rev. Arulampalm Stephen
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக