இயேசுவின் வெளிப்பாடு

இயேசுவின் வெளிப்பாடு (மத்தேயு 2:1-12)

வெளிப்பாடு என்னும் சொல் மறைந்திருக்கும் ஒன்றை வெளிப்படுத்தும் சம்பவத்துடன் தொடர்புடையதாகும். இப்பகுதியில் கடவுள் தன்னை யூதரல்லாதோருக்கு வெளிப்படுத்தியதை பற்றி பேசுகின்றார். கடவுள் அவரவர் சூழ்நிலைக்கு ஏற்றவகையில் புரிந்துக்கொள்ளும் மனநிலைக்கு ஏற்றவகையில் தம்மை வெளிப்படுத்துகின்றார். இதனையே பொது வெளிப்பாடு என்கின்றோம். இப்பணியை ஞானிகளுக்கு நட்சத்திரம் ஆற்றுகின்றது. இதன் ஊடாக கடவுளின் வெளிப்பாடு அனைத்துலகம் சார்ந்தது ஒன்று என்ற முடிவிற்கு வரலாம் (திருப்பாடல் 19:13, உரோமை 2:1-21).

இயேசுவின் வெளிப்பாடு

திருச்சட்டத்தை அறிந்த மேசியாவின் வருகைக்காக காத்திருந்த யூதர்கள் இவ்வெளிப்பாட்டை அசட்டை பண்ணினார்கள். அவர்கள் கடவுளுடன் கூட இருந்தும் அவரை சரிவர புரிந்துக் கொள்ளவில்லை. மாறாக திருச்சட்டம் அறியாத ஞானிகளோ கடவுளின் வெளிப்பாட்டை கண்டபோது கேள்விப்பட்டப்போது அதற்கு அடிப்பணிந்தனர். எனவே கடவுளின் வெளிப்பாடு எங்களிடத்தில் இருந்து கீழ்ப்படிவை வேண்டி நிற்கின்றது. மேலும் வெளிப்பாட்டிற்கு அமைவான செயற்பாடே நாம் எமது பிரதி உபகாரமாக செலுத்த அழைக்கப்படுகின்றோம். இதனையே ஞானிகள் பொன், வெள்ளைப்போளம், தூபவர்க்கம் போன்றவற்றின் ஊடாக வெளிப்படுத்தினார்.

இயேசுவின் வெளிப்பாடு மனித வாழ்வில் நாளாந்த அனுபவங்களுடன் ஒன்றிணைந்து காணப்படுகின்றது. இடையர்களுக்கு அவர்களுடைய பணியின் வேளையிலும் ஞானிகளுக்கு அவர்கள் ஆய்வின் மத்தியிலும் அழைப்பு கிடைக்கின்றது. இயேசு தன்னை முழு உலகிற்கும் வெளிப்படுத்தியதின் ஊடாக இனைவருக்கும் உரித்துடைய பண்பையும் (யோவா 1:14) தனது திருப்பணி அனைவருக்கும் உரியது. (மத் 28:19-20,மத் 9:25-26) என்பதைக் காண்ப்பிக்கின்றார். இச்செயற்பாட்டின் மூலம் கடவுள் அனைவருக்கும் உரித்துடையவர் என்பதை நிரூபிக்கின்றார். (மத் 5:45-46) எனவே கடவுளின் தெரிந்தெடுத்தலும் வெளிப்படுத்தலும் சலுகை அன்று. அது கடமை சார்ந்தது ஒன்றாகும்.

கடவுளுடைய வெளிப்பாட்டை உணர்ந்த நாம் மற்றவர்களுக்கு கடவுளை வெளிப்படுத்த அழைக்கப்படுகின்றோம். (ஏசாயா 49:6) நாம் எமது பணியை ஆற்றாத பட்சத்தில் கடவுள் எம்மை அகற்றி விட்டு அதற்குப் பதிலாக இன்னுமொருவரை தெரிந்து கொள்வார் என்பதே திருமறை கூறும் உண்மையாகும்.

By Rev. Arulampalm Stephen

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக