இறுதித்தீர்ப்பு

இறுதித்தீர்ப்பு (மத்தேயு 25: 31-46)

மத்தேயு 25ம் அதிகாரம் 31ம் வசனத்தில் இருந்து 46ம் வசனம் வரையுள்ள பகுதி இறுதித்தீர்ப்பை பற்றி எடுத்துக் காட்டுகின்றது. இப்பகுதியில் நடுத்தீர்ப்பு செயல்களின் அடித்தளத்தில் நடைபெறுவதை நாம் காணலாம். இப்பகுதியில் இவ்வுலகில் ஆண்டவர் இயேசுவை தேவையுள்ள மனிதர்களில் கண்டோரே மீட்பிற்கு உரித்துடையவர் ஆகின்றனர். அதாவது இவ்வுலகில் வாழ்கின்ற பசியுள்ள, தாகமுள்ள, சிறையில் வாடுகின்ற மக்களை கிறிஸ்துவின் பிரதிநிதிகளாகக் கண்டு அவர்களுக்கு பணியாற்றுவோரே உரித்துடையோர் ஆகின்றனர்.

இறுதித்தீர்ப்பு

மத்தேயு 10:40-42ம் வசனம் வரையுள்ள பகுதியில் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வோர் அவரை அனுப்பிய கடவுளை ஏற்றுக்கொள்கின்றனர் என ஆசிரியர் கூறுகின்றார். இதன் மூலம் கிறிஸ்து பாதிக்கப்பட்ட மக்களுடன் தன்னை அடையாளப்படுத்துபவராகக் காட்டப்படுகின்றது. இவ்வுலகில் தேவையுள்ள மக்களுக்கு நலம் ஆற்றும்பணி கிறிஸ்துவிற்கே உரித்துடையதாகக் காட்டப்படுகின்றது. இதன்மூலம் கிறிஸ்து மக்களின் நாளாந்த செயற்பாடுகளில் தன்னை இணைத்துக்கொள்பவராக காட்டப்படுகின்றார். இதனையே திருத்தூதர் பணிநூலில்; பவுல் ஆதித்திருச்சபை மக்களைத் துன்புறுத்தியப்போது அத்துன்பத்தில் கிறிஸ்துவும் இணைந்து கொண்டதை நாம் காணலாம். (திருத்தூதர் பணிநூல் 9:5) இதன் மூலம் கிறிஸ்து எவ்வாறு தன்னை துன்புறும் சமூகத்துடன் இணைத்துக் கொண்டாரோ அதைப்போல நாமும் எம்மை இணைத்துக் கொள்ள அழைக்கப்படுகின்றோம்.

யாக்கோபு தனது நிருபத்தில் செயலற்ற விசுவாசத்தில் எவ்வித பயனும் இல்லை எனக்கூறுகின்றார். (யாக்2:17) இவ்வார்த்தையின் முழுமையை இறுதித்தீர்ப்பு சம்பவத்தின் போது நாம் காண்கின்றோம். மக்கள் இறைவன் பேரில் விசுவாசத்தைக் கொண்டிருந்த போதிலும் அவ்விசுவாசத்திற்கு செயல்வடிவத்தை கொடுக்க மறந்துவிட்டனர். ஒருவேளை பசியில் உள்ளோருக்காக, தாகத்தில் இருந்தோருக்காக, சிறையில் வாடி இருந்தோருக்காக, செபித்திருக்கக்கூடும் மறுகரையில் எவ்வித செயல்களிலும் ஈடுபடாமல் இருந்திருக்ககூடும். இந்நிலை இறைவன் பார்வையில் அருவருப்பானதொன்றாக காணப்படுகின்றது என யாக்கோபு கூறுகின்றார். (யாக் 2:16-17) இப்பகுதி செயல்களின் மேன்மைத்தன்மையை எமக்கு எடுத்துக்காட்டகின்றது. அதாவது விசுவாசமும் செயல்களும் ஒன்றாக இணைந்து பயணிக்க வேண்டியதன் தேவையை உணர்த்துகின்றது.

எமது நாளாந்த வாழ்வில் பல சந்தர்ப்பங்களில் ஆன்மீக வாழ்வில் அதிக ஈடுபாடு கொண்டிருப்பதால் மனித நேயத்தை மதிக்கும் பண்பு குறைவடைந்துக் கொண்டே செல்லுகின்றது. குறிப்பாக இயேசு கூறிய நல்ல சமாரியன் மாதிரிக் கதையில் (லூக்கா 10:25-37) பாதை ஓரம் காயமுற்ற இருந்த யூத மனிதனுக்கு உதவி செய்யாதபடி ஆசாரியனினதும் லேவியனினதும் ஆன்மீக தடையாக காணப்பட்டு இருக்கக்கூடும் அவர்கள் இருவரும் காயப்பட்ட மனிதன் கடவுளின் சாயலில் படைக்கப்பட்டுள்ளான் என்பதை மறந்துவிட்டனர். (தொ.நூல் 1:25-26) எனவே ஆன்மீகம் செயல்ககளைப் புரிவதற்கு தடையாக அமைந்திராத வகையில் பார்த்துக் கொள்ளவேண்டும். இவ்வாறு பார்த்துக் கொள்ளாத படியாலேயே இறுதித்தீர்ப்பில் மக்கள் கைவிடப்பட்டனர்.

விசுவாச வாழ்வும் செயல் வாழ்வும் சுயபிரபல்யத்தை மையமாகக் கொண்டோ சுயத்திருப்தியை அடிப்படையாகக் கொண்டோ வரையறை அடித்தளமாக்  கொண்டோ ஆற்றிவிட முடியாது. எங்கள் செயல்கள் மேற்கூறிய எல்லா எல்லைகளையும் தாண்டிச் செல்ல வேண்டிய தேவை காணப்படுகின்றது. மேலும் எமது செயல்கள் எம்மை நற்பிரஜைகளாக மாற்றிவிட முடியாது. மாறாக நாம் நல்லவர்களாக இருந்தால் மாத்திரமே நற்செயல்களை எம்மால் செய்யமுடியும். எனவே செயல்களைப் புரிவதற்கு ஆன்மீகத்தின் அவசியம் வலியுறுத்தப்படுகின்றது. (மத் 7:17)

மேலும் நாம் பிறர் மட்டில் பொறுப்புடையவர்கள் என்பதின் அடித்தளத்தில் செயல்களை புரிய அழைக்கப்படுகின்றோம். (தொ.நூல்4:1-10) எனவே செயல்கள் எமது அன்பின் வெளிப்பாடாகவும், சமூகப் பொறுப்பின் நிறைவாகவும் கடவுளின் கட்டளைக்கு அடிபணிந்து நடக்கும் மாதிரியாவும் (தொ.நூல் 1:28) சமத்துவமான சமூகத்தை உருவாக்கும் கருவியாகவும் காணப்படுகின்றது. (ஆமோஸ் 2:6)

By Rev. Arulampalm Stephen

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக