கிறிஸ்தவ வாழ்வில் நடுத்தீர்ப்பு முக்கியமானதொரு சிந்தனையாக காணப்படுகின்றது. திருமறையிலும் திருச்சபை சரித்திரத்திலும் பற்றுறுதி அறிக்கையிலும் இதற்கு அதிக இடம் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக மத்தேயு எழுதிய நற்செய்தி 25ம் அதிகாரம் 14ம் வசனம் முதல் 30 வசனம் வரையுள்ள பகுதியில் தாலந்து உவமைகள் பொதிக்கப்பட்டுள்ளது. இவ் உவமையில் ஆண்டவர் இயேசு நிகழ்கால வாழ்வில் இறுதியியலுக்கான ஆயத்ததின் முக்கியத்துவத்தை பற்றியும் நடுத்தீர்ப்பைப் பற்றியும் ஆசிரியர் குறிப்பிடுகின்றார். எனவே இவ் உவமையில் வெளிப்படும் நிகழ்கால வாழ்வில் இறுதியியலுக்கான ஆயத்தங்களைக் குறித்து நாம் கவனம் செலுத்துவோம்.
![]() |
நம்பிக்கைத் துரோகம் |
தலைவர் தனது பணியாட்களின் திறமைக்கு ஏற்ப ஒருவருக்கு 5 தாலந்தும் இன்னுமொருவருக்கு 2 தாலந்தும் இன்னுமொருவருக்கு 1 தாலந்துமாக வழங்கி இருந்தார்.இதைப்போன்று இறைவனும் எமது திறமைகளுக்கு ஏற்ப எம் ஒவ்வொருவருக்கும் சிறப்புரிமைகளை வழங்கியுள்ளார். தலைவர் தாலந்துகளை வழங்கிய பின்னர் தன்னுடைய பணியாளர்கள் இடத்தில் தாலந்துகள் பற்றி எத்தகைய வினாக்களையும் அவர் எழுப்பவில்லை. பணியாளர்களுக்கு பூரண சுதந்திரம் கொடுக்கப்பட்டு இருந்தது. இதைப் போன்றே கடவுளும் எமக்கும் பூரண சுதந்திரந்திரத்தை தந்துள்ளார். நாம் அவற்றை பிறரின் நன்மைக்காகவும் கடவுளின் திருப்பெயரின் மாட்சிமைக்காகவும் பயன்படுத்துவோம் என்பதில் அவருக்கும் பூரண நம்பிக்கை உண்டு. அநேக சந்தர்ப்பங்களில் கடவுள் எம்மீது கொண்ட நம்பிக்கைக்கு நாம் துரோகம் செய்பவர்களாக காணப்படுகின்றோம். கடவுள் செய்கின்ற பெரிதான தவறு என்னவெனில் தனது படைப்புக்களின் மீது அதிக நம்பிக்கை கொண்டிருப்பதே என்று ஒரு அறிஞர் கூறுகின்றார். எனவே இறுதியியல் சார்ந்த யாத்திரையில் எமக்குத் தரப்பட்டுள்ள தாலந்துகள் தொடர்பாக கடவுள் மட்டில் எங்களுக்கான நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள நாளாந்தம் பலர் அழைக்கப்படுகின்றோம்.
மேற்கூறப்பட்ட உவமையில் சிறிது காலத்தின் பின்னர் தலைவர் தன்னுடைய பணியாட்களிடம் வந்து தாலந்துகள் பற்றிய விபரங்களை கேட்டப்போது 5 தாலந்தைப் பெற்றவர் மேலும் 5 தாலந்துடனும் 2 தாலந்தைப் பெற்றவர் மேலும் 2 தாலந்துடனும் 1 தாலந்தைப் பெற்றவர் வெறும் கரங்களுடனும் வருகை தந்தனர். இங்கு தலைவர் தன் பணியாட்களிடம் செயல்களின் அடித்தளத்தில் கணக்கு சமர்ப்பிக்குமாறு வேண்டுகின்றார். இதே வகையில் கடவுள் எமக்கு ஈந்தளித்த வரங்கள் மட்டில் நாமும் கணக்கு ஒப்படைக்க வேண்டியவர்கள் என்பதை மறந்து விடக்கூடாது. குறிப்பாக செயல்களின் அடித்தளத்தில் இத்தீர்ப்பு நடைப்பெறுகின்றது.
பணியை நேசித்த பணியில் திருப்தி கண்ட இருவரும் நம்மிடத்தில் ஒப்படைக்கப்பட்ட தாலந்துகளை உபயோகித்து இன்னும் அதிக தாலந்தை சம்பாதித்துக் கொள்கின்றனர். மாறாக பணியில் திருப்தி காணாத பணியை நேசிக்காத ஒரு தாலந்தை பெற்றவன் எஜமானை நோக்கி நீர் விதைக்காத இடத்தில் அறுக்கின்றவர் என்றும், தெளிக்காத இடத்தில் சேர்க்கின்றவர் என்று எஜமானைக் குறிப்பிடுகின்றார். பணியை சரிவரச் செய்யாத ஒரு மனிதன் சரிவர செய்ய விரும்பாத ஒருவன் எப்பொழுதும் மற்றவர்களில் குற்றம் காண்பவனாகவே காணப்படுவான்.
பணியின் ஒளியில் தலைவர் நடுத்தீர்ப்பு வழங்குவதை ஆசிரியர் காண்பிக்கின்றார். அதாவது அதிகமாக பணியாற்றிய மனிதருக்கு கிடைக்கும் பரிசு இன்னும் அதிக வேலை ஆகும். மாறாக குறைவாக வேலை ஆற்றியவரிடம் இருந்து அவருக்கு உரித்தான சிறப்பு உரிமையும் பறிக்கப்படுவதை காணலாம். பொதுவாக நாம் அதிகமாக பணியாற்றும் போது எமக்கு அதிகமான வேலைகள் கிடைக்கின்றன. இங்கே நடுத்தீர்ப்பு நிகழ்கால வாழ்வில் இடம் பெறுவதாக ஆசிரியர் எடுத்துக் காட்டுகின்றார்.
எமது நாளாந்த வாழ்வில் கடவுள் எமக்கு பலவிதமான கொடைகளையும் தாலந்துகளையும் கிருபையாய் தந்துள்ளார். அவற்றை சுதந்திரமாக பாவிப்பதற்குரிய உணர்வையும் தந்துள்ளார். இதன் மட்டில் நிகழ்கால வாழ்வில் இறுதியியலின் அடித்தளத்தில் நாம் எமது பணி தொடர்பாக கணக்கு ஒப்புவிக்க அழைக்கப்படுகின்றோம். எமது கடமைகளையும் பொறுப்புக்களையும் நாம் சரிவரச் செய்திருந்தால் எமக்கு இன்னும் அதிக கடமைகளும் பொறுப்புக்களும் கடவுளால் கிடைக்கப் பெறும்.மாறாக எமது திறமைகளை நாம் புதைத்து வைத்திருப்போமேயாகில் எம்மிடம் உள்ளவைகளும் கடவுளால் மீளவும் எடுத்துக் கொள்ளப்படும். எனவே கடவுள் எம்மிடம் நம்பித்தந்த பொறுப்பை நிறைவேற்றுவது எம் ஒவ்வொருவரின் கடமையாகும். அக்கடமையை சரிவர செய்யாது விடில் நாம் கடவுளுக்கு செய்வது நம்பிக்கைத் துரோகமே.
By Rev. Arulampalm Stephen
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக